சீனாவில் தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என சீனா முதல்முறையாக அறிவித்துள்ளமையானது, ஆச்சரியமாக இருந்ததாகவும், இச்சாதனை எப்படி சாத்தியமானது என்பது தொடர்பில் வியப்படைவதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்புப் பிரதிநிதி குழுவின் அறிவிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இதன்போது பேசிய அவர்,
தற்போது, உலகளவில் சுமார் 70 வீதத்திற்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்கள், கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான முன்னேற்பாடு மற்றும் சமாளிப்புத் திட்டங்களை வகுத்துள்ளன.
இதேவேளை, 89 வீதத்திற்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்கள், ஆய்வகங்களில் இவ்வைரஸ் குறித்து சோதனை மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளன.
அதே வேளையில், 68 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு தனியார் பாதுகாப்புச் சாதனங்களை இவ்வமைப்பு அனுப்பிவைக்க உள்ளது. இதற்காக உலக சுகாதார அமைப்புடன் உடன்படிக்கைகளில் கையொப்பமிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்புக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தும் இருக்காமலும், உலக நாடுகள் ஆயத்தம் செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட தகவல்களின்படி, சீனாவின் 31 மாநிலங்களில் தொடர்ந்து 2 நாட்களாக, புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அறிவித்திருந்தது.
உண்மையில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என சீனா முதல்முறையாக அறிவித்துள்ளமையானது, ஆச்சரியமாக இருந்ததாகவும், இச்சாதனை எப்படி சாத்தியமானது என்றும் அவர் வியந்து பேசியுள்ளார்.