கொரோனா தொடர்பில் வடகொரியாவில் மர்மம் நீடித்து வரும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளது.
உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
அதே நேரத்தில் கிம் ஜாங் உன் ஆளும் வட கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றுகூட உறுதிசெய்யப்படவில்லை. எனினும், இதுகுறித்து வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
வட கொரியாவின் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடான சீனாவில் தான் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தென் கொரியாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் வட கொரியாவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அந்நாட்டு அரசு கூறுவதன் உண்மைத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
சென்ற வாரம் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர், வட கொரியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என்று மிகவும் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.
வட கொரிய தலைநகர் பியோங்யோங்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 380க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளை கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக வட கொரிய அரசு 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தியது.
இந்த சூழலில் வட கொரியா இரண்டு ஏவுகணைகளை கடற்பரப்பில் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
இது குறைந்த தூர இலக்குகளை தாக்கவல்ல பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளாக இருக்கக் கூடும் என்று தென் கொரிய ராணுவம் கருதுகிறது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது.
கொரோனா பிடியில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற உலக நாடுகளின் தலைவர்கள் போராடி வரும் நிலையில், வடகொரியாவின் இந்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.